தேசிய கொடியை கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக வந்த விவசாயி
கும்பகோணம், ஆக.22: கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு தேசிய கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்துடன் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த வல்லப பந்த். விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வார வலியுறுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்து போராடி வருவதாகவும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வலியுறுத்தியும், கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரை நிர்வாணத்துடன் இடுப்பில் தேசிய கொடியை கட்டிக்கொண்டு கோஷமிட்டவாறு வந்தார்.
அப்போது இது தேசியகொடியை அவமதிக்கும் செயல் என கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அவரை கண்டித்தனர். ஆனால் அதனை காதில் வாங்காமல் சார் ஆட்சியர் ஹிர்த்யாவிடம் இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த முறை மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிப்பேன் என கூறினார்.இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு தனிமனித ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.