ஒரத்தநாடு வேளாண்துறை அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
ஒரத்தநாடு, ஆக.21: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் ஆத்மா திட்டம் சார்பில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒரத்தநாடு வட்டார ஆத்மா திட்ட தலைவரும் மற்றும் ஒரத்தநாடு திமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான ரமேஷ்குமார் முன்னிலை வகித்ததார். ஒரத்தநாடு வேளாண்மை உதவி இயக்குனர் ஆத்மா திட்டத்தின் பல்வேறு இனங்களில் வழங்கப்பட்ட திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றி விளக்கினார்.
கூட்டத்திற்கு கால்நடை உதவி மருத்துவர் கனகராஜ் கால்நடைத்துறை சம்பந்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்தார். தோட்டக்கலை மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் முத்தமிழ், ஜோசப் ஹிலாரி, அருண்ராஜன் ஆகியோர் தங்கள் துறையில் வழங்கப்படும் மானிய திட்டங்களை எடுத்துரைத்தனர். ஆத்மா திட்ட தலைவர் ரமேஷ் குமார் அனைவரும் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் லீலா நன்றி கூறினார்.