தஞ்சை அருகே எஸ்பிஐ நிதி விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூர், ஆக.20: தஞ்சாவூரை அடுத்த நரசநாயகபுரம் கிராமத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மண்டல மேலாளர் ஆண்டோலியோனார்ட் கலந்து கொண்டு கிராமத்தில் உள்ள அனைவரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் விபத்து காப்பீடு ரூ.20, மற்றும் ஆயுள் காப்பீடு ரூ.436 ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தினால் விபத்து காப்பீடு இழப்பீடு தொகை ரூ.2 லட்சம், ஆயுள் காப்பீடு ரூ.2 லட்சம், பெறலாம் என்றார்.
மேலும், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து மாதம் தோறும் பிரிமியம் தொகை செலுத்தினால் 60 வயதிற்கு பின் மாதம்தோறும் ரூ.5,000 பென்ஷன் பெறலாம். பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறினார். அதை தொடர்ந்து மண்டல அலுவலக மேலாளர் பழனிமுத்து, வங்கியில் உள்ள நிதி திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினார். இந்த முகாமில் நரசநாயகபுரம் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக வங்கி துணை மேலாளர் கார்த்திகா நன்றி கூறினார்.