விபத்தில்லா தீபாவளியை கொண்டாட அரசு பள்ளி மாணவிகளுக்கு தீயணைப்புத்துறையினர் பயிற்சி
தஞ்சாவூர், அக்.18: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விபத்து இல்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், ஏதேனும் விபத்துகள் நடந்தால் தயக்கமின்றி தீயணைப்பு துறையை அணுகலாம். 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இறுதியாக சங்க செயலாளர் வீரமணி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.