இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விமானப்படை விளம்பர வாகனம்
தஞ்சாவூர், டிச.13: தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், விமானப்படை விளம்பர வாகனத்தை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய விமானப்படையில் (IAF) உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்கும் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்திய விமானப்படை சார்பில் ஒரு சிறப்பு விளம்பர வாகனத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
இந்திய விமானப்படை சார்பில் ஒரு சிறப்பு விளம்பர வாகனத்தை, இந்திய விமானப்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த மற்றும் விருதுகள் பெற்ற ராணுவ அதிகாரியான ஏர் கமாண்டர் கிரிஷ், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் பிற மாவட்ட அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு வாகனம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியில் நிறைவடையும். மாவட்ட அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் ஊடாடும் காட்சிப் பெட்டிகள் (Interactive displays), வழிகாட்டுதல் பொருட்கள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் மூலம் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடைவதே இதன் நோக்கமாகும்.
இதன் மூலம் இளைஞர்களின் பங்கேற்பு, இப்பகுதி இளைஞர்களுக்கு மதிப்புமிக்க தொழில் தகவல்களை வழங்குவதில் சிவில் மற்றும் ராணுவத்திற்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தவச்செல்வம், முதன்மை கல்வி அலுவலர் பேபி, விமானப்படைத் தளத்தின் விங் கமாண்டர்கள் வினோத் நாராயணன், ராகுல், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.