திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
திருவிடைமருதூர், அக்.13: திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராம சேவை மைய கட்டிடத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள கிராம மக்களிடம் அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில்; வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற ஆட்சியை தொடர்ந்து மக்களுக்கு தருகின்ற ஒரே முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில் ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு கடந்த காலத்தில் என்ன இருந்தது, என்ன செலவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் தெரிவிக்கப்பட்டு முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தமிழக முதலமைச்சர் கிராம சபையில் மக்களிடம் நேரடியாக பேசும் விதமாக அமைக்கப்பட்டிருந்த காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி ராமலிங்கம், திருவிடைமருதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர.ஜெயபால், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், காந்திமதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.