கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஆக 7: பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாபநாசம் வட்டக் கிளை தலைவர் ஆரோக்கிய பவுல்ராஜ் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வி தகுதியை பட்ட படிப்பாக உயர்த்தவேண்டும் பத்தாண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்களாகவும் 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வழங்கியும் அதற்கு ஏற்ப ஊதியம் வழங்கவேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பட்டா மாறுதல் பரிந்துரைபெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ், பாபநாசம் வட்ட செயலாளர் சிவப்பிரகாசம், பாபநாசம் வட்ட பொருளாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.