செருவாவிடுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
பேராவூரணி, நவ.6: பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட செருவாவிடுதி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணியை உதவி கோட்டப்பொறியாளர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர்-சாயல்குடி மாநில சாலையினை பரப்பு அடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் திட்டத்தின் கீழ் இருவழித்தடத்திலிருந்து பல வழித்தடமாக அகலப்படுத்தி தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையில் பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட செருவாவிடுதியில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியை பேராவூரணி உதவி கோட்டப்பொறியாளர் விஜயகுமார், உதவிப்பொறியாளர் திருச்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை அகலப்படுத்தி வருவதை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டி தமிழ்நாடு அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர் .