திருக்கனூர்பட்டி பகுதியில் 4 சாலை பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும்
தஞ்சாவூர், நவ.5: தஞ்சாவூர் அடுத்த திருக்கனூர்பட்டி பகுதியில் நான்கு சாலை பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் திருக்கனூர்பட்டி பகுதி உள்ளது. மேலும் அங்கு 4 சாலை பிரியும் பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக வல்லம், தஞ்சாவூர் நகர் பகுதி, புதுக்கோட்டை, மன்னார்குடி செல்ல முடியும்.
இந்த நிலையில் காலை முதல் இரவு வரை 1000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும் இருக்கும். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் அங்கு விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
எனவே வாகன ஓட்டிகள் கோரிக்கையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து தர வேண்டும் எனவும், அவ்வாறு அமைத்தால் விபத்துகளை தவிர்க்க முடியும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.