வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.67 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூர், அக்.26: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கிகளில் பத்து வருடங்களுக்கு மேலாக உரிமை கோரப்படாத வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், மீட்சுவல் பண்டு தொகைகள் உள்ளிட்டவைகள் ‘உங்கள் பணம் உங்கள் உரிமை’ முகாம் மூலம் 56 வாடிக்கையாளர்களுக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான தொகையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் உங்கள் பணம். உங்கள் உரிமை திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கியில் பத்து வருடங்களுக்கு மேலாக உரிமை கோரப்படாத வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைகள், மற்றும் காப்பீட்டு தொகைகள். மீட்சுவல் பண்டு தொகைகள் திரும்ப பெறும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இம்முகாம் அக்டோபர் முதல் டிசம்பர் 2025வரை அனைத்து வங்கி, காப்பீட்டு அலுவலகம் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறும். உரிமை கோரப்படாத தொகை என்பது வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை 10 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருந்தாலும், காப்பீட்டு தொகை ஏழு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருந்தாலும் அந்த தொகையானது மத்திய அரசின் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்படுகிறது.
அவ்வாறு மாற்றப்பட்ட தொகை உரிய நபர்களிடம் அல்லது உரியவர் இறந்து போய் இருந்தால் அவர்களின் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் இந்த முகாம் செயல்படுகிறது. இந்த அறிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், பல்வேறு வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு இத்திட்டம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார்.