புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்கு சீல்
தஞ்சாவூர், செப்.3: தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுரையின் பேரில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாநகராட்சி அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, கோட்டம் எண் 2 பூமால் ராவுத்தர் தெருவில் செயல்படும் கடைகளை ஆய்வு செய்த போது ஒரு பலசரக்கு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கடையிலிருந்து மொத்தம் 1.50 கிலோ புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ஏற்கனவே மருத்துவக் கல்லூரி சாலையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்தக் கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.