ஒப்பந்ததாரர் மின்கட்டணம் செலுத்தாததால் இருளில் கிடக்கும் மீன் மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி
தஞ்சாவூர், செப்.3:தஞ்சாவூர் தற்காலிக மீன் மார்க்கெட்டில் கடந்த ஒரு வார காலமாக மின் இணைப்பு இல்லாததால் மீன் கடை உரிமையாளர்கள் ஜெனரேட்டர் மூலம் மின் வசதி ஏற்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில் அருகே தற்காலிக மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தஞ்சை மீன் மார்க்கெட்டில் 57 சில்லறை கடைகளும், 70 மீன் வெட்டும் கடைகளும் உள்ளது. தஞ்சை மீன் மார்க்கெட்டுக்கு சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் ஐந்து டன் அளவிற்கு மீன் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் தஞ்சை மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கடைக்கு ரூ.50 வசூல் செய்யப்பட்டது. தற்போது, ஒரு கடைக்கு ரூ.100 வசூல் செய்யப்படுகிறது. இதில், தண்ணீர் மின்சார வசதி உள்ளிட்டவை அடங்கும். மீன் மார்க்கெட் ஒப்பந்ததாரர் மின்சார கட்டணம் செலுத்தாததால்
அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடை வைத்திருப்பவர்கள் ஜெனரேட்டர் மூலம் மின் வசதி பெற்று வருகின்றனர்.
மின்சார வசதி இல்லாததால் மீன் மார்க்கெட் பகுதி முழுவதும் இருண்டு காணப்படுகிறது. அதேபோல் உயிர் மீன்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் வசதியும் வழங்கப்படாமல் மீன்கள் இறந்து விடுகிறது. இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்தில் அங்கு கடை நடத்தி வருகின்றனர். எனவே, மின்சாரம் வசதி வழங்கப்படவில்லை என்றால் அங்கு கடை வைத்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.