திருக்காட்டுப்பள்ளியில் ஒரு அதிசயம் மின்கம்பி ஆதாரத்தில், சாக்கடையில் நின்று கடமையை செய்யும் மின்கம்பம்: உயிர்பலி வாங்கும் முன் அகற்றப்படுமா?
திருக்காட்டுப்பள்ளி, செப். 2: திருக்காட்டுப்பள்ளியில் அடிப்பகுதி கட் ஆனாலும், மின் கம்பி ஆதாரத்தில், சாக்கடையில் நின்று கொண்டு கடமையை செய்து கொண்டிருக்கும் மின் கம்பம் கீழே விழுந்து உயிர் பலி வாங்கும் முன் அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளி ஐம்பதாம் நம்பர் ரோட்டில் உள்ள லாயத்தெருவில் இருந்த மின் கம்பம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கட்டாகி உள்ளது. அடிப்பகுதி கட் ஆனாலும், மின்கம்பத்தின் மேற்புறத்தில் இருபுறம் உள்ள மின் கம்பிகள், வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள மின் ஒயர்களின் ஆதாரத்தில் சாக்கடைக்குள் நின்று கொண்டிருக்கிறது.
மின்கம்பியின் ஆதாரத்தில், சாக்கடைக்குள் நின்று கொண்டிருக்கும் இந்த மின் கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்ப்பட்டால், பலரின் உயிர் போகும் ஆபத்தான நிலை உள்ளது. இந்த மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்தால், சாக்கடை நீரிலும் மின்சாரம் பாயும், இதனால் சாக்கடை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் ஆபத்தான நிலை இங்கு நிலவி வருகிறது. திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரியபடுத்தியும், இது நாள் வரை உடைந்து, மின் கம்பிகளின் ஆதாரத்தில் சாக்கடையில் நின்று கொண்டிருக்கும் மின் கம்பத்தை மாற்றாமல், அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனிவரும் காலம் தொடர் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது. கீழ் பகுதியில் எவ்வித பிடிப்பும் இல்லாமல் நிற்கும், மின்கம்பம் காற்றடித்தால் கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படக்கூடும். மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் முன்பாக உடைந்து நிற்கும் மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.