பணி செய்யாத பணியாளர்கள் பெயரில் 100 நாள் வேலை திட்டத்தில் லட்சக்கணக்கில் மோசடி
தஞ்சாவூர், செப் 2: தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குருங்குளம் கிழக்கில் 2021ம் நிதி ஆண்டிலிருந்து 2025 வரை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள்மாறாட்டம் செய்து ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர் துணையோடு பல லட்சம் ரூபாய் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். இது குறித்து குருங்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் கொடுத்து மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பல்வேறு வேலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணிக்கு வராதவர்களின் பணி அட்டை பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடாத பணியாளர்களின் கையொப்பங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
பணி செய்யாத நபர்களின் பெயர்களில் உள்ள அட்டைகளை பயன்படுத்தி வங்கி கணக்கின் மூலம் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. பணி செய்யாத நபர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடாக மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு நிதியில், பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு உரிய நலத்திட்ட நன்மைகள் கிடைக்கவில்லை. எனவே குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யாத பணியாளர்கள் பெயரில் மோசடி செய்து பல லட்சம் ரூபாய் அரசு பணத்தை மோசடி செய்து சுருட்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.