பாபநாசம் பள்ளியூரில் வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படுத்தும் சாலை: தண்ணீர் இல்லாமல் காட்சி பொருளான நீர்தேக்க தொட்டி
தஞ்சாவூர், செப். 2 : குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை மழைக்காலம் தொடங்கும் முன்பு விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பள்ளியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கரடு முரடாக காட்சியளிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி, அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
மேலும் பள்ளியூரில் காணப்படும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வராமல், கிராம பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டி எவ்வித பலனும் அளிக்காமல் காட்சியளிக்கிறது. குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கும் பணியினை மழைக்காலம் முன்பே தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும்.கிராம பொதுமக்களுக்கு பயனளிக்காமல் காணப்படும் நீர் தேக்க தொட்டியினை சுத்தம் ெசய்து, தண்ணீரை சேமித்து குழாய்களில் தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.