ரூ.423.13 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்: குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சபாநாயகர் அப்பாவு ஆலோசனை
திசையன்விளை, ஜூலை 23: திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் ரூ.423.13 கோடியில் நடந்து வரும் களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் குறித்து சபாநாயகர் அப்பாவு, பேரூராட்சி தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு நகராட்சி, நாங்குநேரி, ஏர்வாடி, மூைலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி பேரூராட்சிகள் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு வள்ளியூர், திசையன்விளை, பணகுடி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு ரூ.423.13 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
எதிர்காலத்தில் பாதாள சாக்கடைத் திட் டம் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தில் நாளொன்றுக்கு ஒருவருக்கு 135 லிட்டர் என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டு மக்கள் தொகையானது அடிப்படை வருடம் 2037ல் 1,79,320, இடைக்கால வருடம் 2037ல் 2,10,090 மற்றும் உச்சகட்ட வருடம் 2052ல் 2,44,760 எனவும் கொள்ளப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தாமிரபரணி ஆற்றில், சேரன்மகாதேவி அருகில் அமைக்கப்பட்டுள்ள 8 மி.மீ விட்டமுள்ள கிணற்றிலிருந்து நதிநீர் எடுக்கப்பட்டு 9.06 கி.மீ தொலைவிலுள்ள கங்கனாங்குளம் அருகிலுள்ள திருவிருந்தான் புளியில் அமைக்கப்பட்டு வரும் நீர் 31.67 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து மின் மோட்டார்கள் மூலம் உந்தப்பட்டு, பின் நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் அமையவுள்ள தரைமட்ட குடிநீர் தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது.
பின்னர் ஏற்கனவே அமைந்துள்ள 38 மேல்நிலைத் தொட்டிகள், 24 புதிய மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக புதிதாக பதிக்கப்படவுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் 521.68 கி.மீ பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் 49,417 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது 75% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வருகிற நவம்பரில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் திட்ட பணிகளுக்கு வள்ளியூர், திசையன்விளை, பணகுடி பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகத்துடன் பணிகளை விரைவாக முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், தலைமை பொறியாளர் கணேசன், நிர்வாகப் பொறியாளர் தயாளன் மோசஸ், உதவி நிர்வாகப் பொறியாளர் பாக்கியராஜ், ஆசிக், திட்ட மேற்பார்வையாளர் விஜயகுமார், திசையன்விளை முன்னாள் பேரூராட்சி தலைவர் சேம்பர் செல்வராஜ், கவுன்சிலர்கள் கமலா நேரு, அலெக்ஸ், கண்ணன், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்க மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், திசையன்விளை நகர தலைவர் சாந்தகுமார், காங்கிரஸ் விவேக் முருகன், சண்முகவேல் பர்னிச்சர் மணிகண்டன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் நெல்சன், ஜெய்சங்கர், முத்து, ராஜன், பொன்இசக்கி, பேரூராட்சி தலைவர்கள் வள்ளியூர் ராதாகிருஷ்ணன், பணகுடி தனலெட்சுமி தமிழ்வாணன், வள்ளியூர் துணைத்தலைவர் கண்ணன், பணகுடி துணைத்தலைவர் புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி சுயம்பு உட்பட அரசு அலுவலர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.