2 நாள் சிறப்பு முகாமில் ரூ.26.46 லட்சம் வரி வசூல்
கோவை, அக். 29: கோவை மாநகராட்சி சார்பில், நடப்பு 2024-2025ம் நிதியாண்டில் அரையாண்டு வரையிலான, மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை பொதுமக்கள் எளிதாக செலுத்தும் வகையில், சிறப்பு வரி வசூல் முகாம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடந்தது. அதாவது, கிழக்கு மண்டலத்தில் 56, 7, 8 ஆகிய வார்டுகள், மேற்கு மண்டலத்தில் 37, 45, 33, 34 ஆகிய வார்டுகள், வடக்கு மண்டலத்தில் 25, 28 ஆகிய வார்டுகள், தெற்கு மண்டலத்தில் 85, 88, 96, 32 ஆகிய வார்டுகள், மத்திய மண்டலத்தில் 63, 70, 80 ஆகிய வார்டுகள் என மொத்தம் 16 வார்டுகளில் இம்முகாம் நடந்தது.
மேற்கண்ட இரு தினங்களிலும் கிழக்கு மண்டலத்தில் ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 806, மேற்கு மண்டலத்தில் ரூ.6 லட்சத்து 24 ஆயிரத்து 512, வடக்கு மண்டலத்தில் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 256, தெற்கு மண்டலத்தில் ரூ.6 லட்சத்து 63 ஆயிரத்து 579, மத்திய மண்டலத்தில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 76 என மொத்தம் ரூ.26 லட்சத்து 46 ஆயிரத்து 229 வரி வசூலானது. இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ‘’மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை உடனுக்குடன் செலுத்தி, மேல்நடவடிக்கையை தவிர்த்துக்கொள்வது நல்லது. வரியினங்களை முறையாக செலுத்தும்பட்சத்தில், மாநகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தடை எதுவும் இருக்காது’’ என்றார்.