ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சையில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், நவ.28: தஞ்சையில் ஒன்றிய அரசை கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிமண்டபம் அருகே உள்ள தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல் தலைமை வகித்தார். அப்போது, மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். 150 ஆண்டு காலம் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்கள் 44ஐ நான்கு சட்ட தொகுப்பாக சுருக்கி, தொழிலாளர்களுக்கு விரோதமாக நடைமுறைபடுத்துவதை கைவிட வேண்டும். உத்திரபிரதேச மாநில மின்வாரியத்தில் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாய்ஸ் பெடரேசன் செயலாளர் மோகன்தாஸ், பொறியாளர் சங்க நிர்வாகி சுந்தர், பொறியாளர் கழக நிர்வாகி சிவக்குமார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் காணிக்கைராஜ், ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஐக்கிய சங்க நிர்வாகி பாரவேல் நன்றி கூறினார்.