திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாக்குச்சாவடி முகவர்கள் பணி மிக முக்கியமானது
திருவிடைமருதூர், நவ.15: தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) மற்றும் இளைஞரணி பாக முகர்வர்கள் பயிற்சி கூட்டம் சாரதா மஹாலில் நடைபெற்றது. இப்பயிற்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் தொகுதி எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன், திருவிடைமருதூர் தொகுதி பார்வையாளர் குறிஞ்சிவாணன், கும்பகோணம் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, கூகூர் அம்பிகாபதி, உள்ளூர் கணேசன், உதயா ரவிச்சந்திரன், மிசா.மனோகரன் மற்றும் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மற்றும் சிந்தனை எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
அப்போது கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாக்குச்சாவடி முகவர்கள் பணி மிக முக்கியமானது. இப்பயிற்சியில் அளிக்கும் முழு தகவலையும் தெரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். நாம் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம்.
பீகார் தேர்தலில் ஜெயிக்கவே முடியாது என்று நினைத்தவர்கள் எல்லாம் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது நடைபெறும் பயிற்சி பட்டறையோடு நீங்கள் எஸ்ஐஆர் வேலைகளை பார்க்க வேண்டும். நான்காம் தேதி வரை அந்த வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சி அமைய டெல்டா மாவட்டங்களில் உள்ள 40 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.
இப்பயிற்சி கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம் தொகுதி), அன்னியூர் சிவா (விக்கிரவாண்டி தொகுதி), திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சார்பணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய செயலாளர் சுந்தர ஜெயபால் நன்றி கூறினார்.