ராசிபுரத்தில் வெப்பம் தணித்த திடீர் மழை
ராசிபுரம், ஜூலை 11: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6மணியளவில் திடீரென பெய்த மழையால், நகர பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம், பட்டணம், ஆண்டுகளூர் கேட், குருசாமிபாளையம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல், நாமகிரிப்பேட்டை ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2மணி நேரம் பெய்த கனமழையால், வெப்பம் தனிந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.