பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து
அரூர், ஜூலை 2: தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியமண்டி தெருவில் விஜயா என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பிற்பகல் 12 மணி அளவில், திடீரென வீட்டில் ஜன்னல் வழியாக புகை வருவதை, அருகில் வசிப்பவர்கள் பார்த்து, விஜயாவுக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, புகை மூட்டமாக இருந்தது. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) ஏழுமலை மற்றும் வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீச்சியடித்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கருகி நாசமானது. தகவலறிந்து வந்த அரூர் தாசில்தார் பெருமாள் மற்றும் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.