வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
ஊத்தங்கரை, ஆக.28: ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லவன்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நல்லவன்பட்டி, நல்லவன்பட்டி புதூர், காமராஜ் நகர், பொதுப்பணித்துறை கால்வாய் ஆகிய கிராமத்திலிருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்னர் ஒரு தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்ட நிலையில், பின்னர் நியமனத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்பதாகவும், காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.