பழநி பகுதியில் சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று: மின்தடையால் கிராமங்கள் அவதி
பழநி, ஜூலை 8: பழநி பகுதியில் சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றால் ஏராளமான கிராமங்களில் மின்தடை ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. சாலையில் உள்ள புழுதிகளுடன் காற்று வீசுவதால் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். உடுமலை மற்றும் பழைய தாராபுரம் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சூறைக்காற்றின் காரணமாக பகல் நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களாகவே பழநி பகுதிகளில் கேபிள் டிவிக்களும் பழுதடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தடையில்லா மின்சாரம் கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, காற்று பலமாக வீசுவதால் மின்கம்பிகளின் மீது மரக்கிளைகள் விழுகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது. மின்தடை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், காற்று பலமாக வீசும்போது மின்தடை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இவ்வாறு கூறினர்.