குடியரசு தினத்தன்று மாநில அளவிலான சதுரங்கப்போட்டி
கரூர், ஜன. 25: ஜனவரி 26ம்தேதி அன்று கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெறவுள்ளன. சதுரங்க போட்டி, 9, 11, 13, 18 மற்றும் திறந்த நிலை என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனியாக சைக்கிள் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கும் 20 கோப்பைகளும், மாணவிகளுக்கு 20 கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன. சிறப்பு பரிசாக 3 பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த போட்டியில் மொத்த பரிசாக 200 கோப்பைகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. திறந்த (ஒபன்) நிலை பிரிவில் 27 பரிசுகள் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும், அனைத்து ஸ்போர்ட்ஸ் கடைகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட சதுரங்க தலைவர் நாச்சிமுத்து மற்றும் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்த் செஸ் அகாடமி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.