பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்
பரமக்குடி, ஜூலை 28: தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் சிறப்பு முகாங்கள் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அந்த வகையில் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு நகர் பகுதியில் உள்ள 6,7,8 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 13 துறைகளில் 43 சேவைகள் உள்ள மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
முகாமினை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். இதில் 150க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு உடனடியாக 40 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன், நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், இளநிலை பொறியாளர் சுரேஷ், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், வடக்கு நகர் துணைச் செயலாளர் மணி, நகர்மன்ற உறுப்பினர்கள் குபேந்திரன், கருப்பையா, சர்மிளா அக்பர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.