தோணுகால் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: கலெக்டர் ஆய்வு
காரியாபட்டி, ஜூலை 26: காரியாபட்டி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் காரியாபட்டி அருகே தோணுகாலில் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் சுகபுத்ரா கலந்து கொண்டு ஆய்வு செய்தார். முகாமில் ஒவ்வொரு துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு வந்த விண்ணப்பங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். முகாமில் ஏராளமான மக்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை, முதியோர் பென்ஷன், பட்டா மாறுதல், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
வருவாய் துறை, சமூக நலத்துறை, மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக தீர்வுகளை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். முகாமில் ஒன்றிய செயலாளர் கண்ணன், முன்னாள் யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.