முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய குறைதீர் சிறப்பு முகாம்
காஞ்சிபுரம் ஜூலை 10: காஞ்சிபுரத்தில் மொபைல் வேன் மூலம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் குறைதீர் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராணுவ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் தங்களின் SPARSH PPO மற்றும் SPARSH Updation SPARSH குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள சிடிஏ சென்னை மூலம் மொபைல் வேன் இன்று (10.7.2025) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டம் வருகிறது.
இம்முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில், ஓய்வூதியம் தொடர்பான குறைகள் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் ஆதார் கார்டு, பேன் கார்டு, மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், அசல் படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஆணை நகல், அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.மேலும், விவரம் அறிய காஞ்சிபுரம் மாவட்ட உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 044-2226 2023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.