குளத்தூரில் தென்னிந்திய கபடி போட்டி
குளத்தூர், ஜூலை 23: குளத்தூரில் ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட தென்னிந்திய அளவிலான ஆண், பெண் கபடிப் போட்டியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் அமைச்சர் கீதாஜீவன் துவக்கிவைத்தார்.
குளத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் ஆனித்திருவிழா, காமராஜர் 123வது பிறந்தநாள் விழா வையொட்டி ஜாலிப்ரண்ட்ஸ் கபடி குழு சார்பில் 61ம் ஆண்டு ராஜநிஷா கோப்பைக்கான தென்னிந்திய அளவிலான ஆண், பெண் கபடி போட்டிகள் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தலைமை வகித்து மகளிர் அணிகளுக்கிடையேயான போட்டிகளை துவக்கிவைத்துப் பேசினார். நிகழ்விற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து, இமானுவேல், அவைத்தலைவர் கெங்குமணி, தூத்துக்குடி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்விதிலகராஜ், கிளை நிர்வாகிகள் பேச்சிமுத்து, பாலமுருகன் ஆதித்தன், சாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து பெண்களுக்கான லீக் சுற்று போட்டிகள் மற்றும் ஆண்களுக்கான லீக் சுற்று போட்டிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பரிசுகளுக்கான போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவைச்சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடின. ஏற்பாடுகளை குளத்தூர் ஜாலி ப்ரண்ட்ஸ் கபாடி குழுவினர் செய்திருந்தனர்.