கோண்டி காலனி பகுதியில் சமூக விழிப்புணர்வு முகாம்
கோவை, ஜூலை 11: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 97-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தராபுரம் கோண்டி காலனி பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் சமூக விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இதை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கிவைத்தார். பின்னர், அவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் 97வது வார்டுக்கு உட்பட்ட கோண்டி காலனி பகுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கோவை மாநகராட்சி மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் இப்பகுதி மக்கள் சமூக ரீதியில் மேம்பாடு அடையும் வகையில், சமூக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமினை இப்பகுதி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.