திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெருங்கியும் குறையாத பனிப்பொழிவு
திருவாரூர், மார்ச் 4: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையில் பெய்த கடும் பனிபொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளானது. ரயில் நிலையம் மற்றும் தெப்பகுளம் பனிபொழிவால் மூடப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலமானது அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் துவங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் மழை பெய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் பின்னர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிபொழிவு இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் முதல் வாரத்திலேயே துவங்கி பெய்த நிலையில் இந்த பருவமழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மேலும் வங்ககடலில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலானது கடந்த நவம்பர் மாதம் 30ந் தேதி பாண்டிச்சேரிக்கும் மாமல்லபுரத்திற்குமிடையே கரையை கடந்த நிலையில் இதன்காரணமாக சென்னை, விழுப்புரம், கடலு£ர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் இதன்காரணமாகவும் வெள்ளபெருக்கும் ஏற்பட்டது.