கானாடுகாத்தான், சருகணியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சிவகங்கை, செப்.3: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை கானாடுகாத்தான், சருகணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள் நடைபெறவுள்ளது.
நாளை கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 6 வரை உள்ள பகுதிகளுக்கு நேமத்தான்பட்டி, மாணிக்கவாசகர் தெருவில் உள்ள பனையம்மை படைப்பு திருமண மண்டபத்திலும், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அ.சிறுவயல், நடராஜபுரம், வேப்பங்குளம், பனங்காடி, பி.நெற்புகபட்டி ஆகிய பகுதிகளுக்கு அ.சிறுவயல் தாகூர் நடுநிலைப் பள்ளியிலும் நடக்கிறது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலம்பட்டி, அழகிச்சிப்பட்டி, ஒக்கப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு மலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சருகணி, வெள்ளிக்கட்டி, உருவாட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு சருகணி புனித பால் துவக்கப் பள்ளியிலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலநெட்டூர், டி.புதுக்கோட்டை, தெற்கு சந்தனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு மேலநெட்டூர் சமூதாயக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இதில் பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்று வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு இம்முகாமில் உடனடி தீர்வு காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மனு அளித்திட விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளும் இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.