பக்தர்கள் வினோத வழிபாடு
மண்டபம்,செப்.18: உச்சிப்புளி அருகே தாமரைக்குளம் பகுதியில் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், பக்தர்கள் இடுப்பு மற்றும் தோளில் வேல் குத்தி ஆடும் வினோத வழிபாடு நேற்று நடைபெற்றது. மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே தாமரை குளத்தில் பத்ரகாளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த பழமையான ஆலயத்தில் ஆண்டு தோறும் பொங்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா செவ்வாய் மற்றும் புதன் கிழமை நடைபெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் ஆலயம் முன்பு பொங்கல் திருவிழாவில் விரதம் இருந்து பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். அதன் பின்னர் பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கள் இடுப்பு மற்றும் தோளில் இரண்டு புறமும் வேல் குத்தி பத்ரகாளியம்மனை நினைத்து நடனமாடி ஆலயத்தை சுற்றி வலம் வந்த காட்சி நடைபெற்றது. திருவிழாவில் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.