கமுதி அருகே உறவினர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
கமுதி, ஆக.18: கமுதி அருகே உறவினர் வீட்டில் 14.75 பவுன் நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கமுதி அருகே அபிராமம், பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி முனீஸ்வரி (38). இவர் கோனேரியேந்தல் கிராமத்தில் வசிக்கும் தனது இரண்டாவது தம்பி முனியசாமி வீட்டில் 14.75 பவுன் தங்க நகையை கொடுத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி இந்த நகை திருடு போனது. இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், முனீஸ்வரியின் கடைசி தம்பி முருகானந்தம் மனைவி வித்யா (25) நகையை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, எஸ்ஐ ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வித்யாவை பிடித்து விசாரித்த போது, நகைகளை திருடி ராமநாதபுரத்திலுள்ள அடகு கடையில் விற்று, அதே கடையில் புதிதாக நகை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, வித்யாவை போலீசார் நேற்று கைது செய்து அவரிடமிருந்து 8 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.