தூய்மை பணியாளர்கள் போராட்டம்
ராமநாதபுரம், ஆக.15: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்ததை கண்டித்து, ராமநாதபுரம் நகராட்சியில் நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து, நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏஐடியுசி துப்புரவு தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி சண்முகராஜ் தலைமையில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், நீண்ட நாட்களாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.