திருவாடானை அருகே நிழற்குடை கட்ட பூமிபூஜை
திருவாடானை, நவ.11: திருவாடானை அருகே பாரதிநகர் பகுதியில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரதிநகர் பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து இருந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை இடித்து அகற்றி அப்புறப்படுத்தி விட்டனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், மாவட்ட நிர்வாகம் இந்த பேருந்து நிறுத்தத்தில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ரூ.9.30 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. நிழற்குடை அமைப்பதற்கு நேற்று எம்எல்ஏ கருமாணிக்கம் பூமிபூஜை போட்டு அடிக்கல் நாட்டிய பிறகு பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் திமுக திருவாடானை மத்திய ஒன்றியச் செயலாளர் சரவணன், முன்னாள் யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.