ஆட்டோ ஓட்டுநர்களால் அடிக்கடி விபத்து
ராமநாதபுரம், டிச. 4: ஆட்டோ டிரைவர்களுக்கு காக்கி சீருடை, பெயர் அட்டை, ஆட்டோ நம்பர், நிர்ணயிக்கப்பட்ட பயணிகளை ஏற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள், விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஒரு சில ஆட்டோக்களில் 18 வயதிற்கு உட்பட்ட லைசென்ஸ் இல்லாத ஓட்டுநர்கள் அதிவேகத்தில் கண்மூடித்தனமாக ஆட்டோவை ஓட்டி தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விபத்துகளினால் அப்பாவி பொதுமக்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒருவரை ஒருவர் போட்டி போட்டு முந்திச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள், ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.