2025-26ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.23,568 கோடி கடன் வழங்க இலக்கு
சிவகங்கை, ஜூலை 24: வங்கிகள் மூலம் ரூ.23,568 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தலைமை வகித்து, கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் பொற்கொடி பேசியதாவது:மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சிவகங்கை மாவட்டத்தின் 2025-26ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், வங்கிகள் மூலமாக ரூ.23ஆயிரத்து 568கோடி கடன் 2025-26ம் ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
கடன் திட்ட அறிக்கையில் விவசாயத் துறைக்கு ரூ.16,201 கோடி, தொழிற்துறைக்கு ரூ.1,438 கோடியும் மற்றும் இதர முன்னுரிமை துறைகளுக்கு ரூ.5,927 கோடி என மொத்தம் ரூ.23,568 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் அரசு நிர்ணயித்த வருடாந்திர கடன் திட்ட இலக்கில் 115.29 சதவீதம் எய்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவின்குமார், தலைமை மாவட்ட பொறுப்பாளர் (ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகம், சென்னை) அன்பரசு, மாவட்ட வளர்ச்சி அலுவலர் (நபார்டு) அனிஷ்குமார், மண்டல மேலாளர்(தமிழ்நாடு கிராம வங்கி) நித்யானந்தன், மண்டல தலைவர் (எச்டிஎப்சி வங்கி) யோகமதி, ஆர்எஸ்இடிஐ இயக்குநர்கள் மற்றும் அனைத்து வங்கியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.