காரைக்குடி மாநகராட்சி பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சிவகங்கை, ஜூலை 25: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 15, 17, 18ஆகிய பகுதிகளுக்கு ஸ்ரீதேவேந்திரன் மஹாலிலும், திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1, 2, 3, 8, 9பகுதிகளுக்கு திருப்புவனம் மருதுபாண்டியர் மஹாலிலும், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிலும், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு கண்டாங்கிபட்டி பல்வகை பயன்பாட்டு நிலையத்திலும், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு கண்ணங்குடி உயர்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு பிரான்மலை, அறிவியூர் வடக்கு வளவு நகரத்தார் மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதில் பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்று வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு இம்முகாமில் உடனடி தீர்வு காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மனு அளித்திட விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளும் இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.