திருப்புத்தூர் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்
திருப்புத்தூர், ஜூலை 31: திருப்புத்தூரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நேற்று பேரூராட்சித்துறையினர் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். பாலிதீன் பை ஓழிப்பு விழிப்புணர்வு குறித்து கலெக்டரின் உத்தரவுப்படியும், திருப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் அறிவுறுத்தலின் பேரில், துப்பரவு மேற்பார்வையாளர் மோகன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் பாலிதீன் பை ஒழிப்பு ஆய்வினை நேற்று கடைகளில் மேற்கொண்டனர். இதில் அண்ணா சிலை பகுதி, சிவகங்கை சாலை பகுதி, மதுரை சாலை, பெரிய கடைவீதி உள்ளிட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதில் 10 கிலோவிற்கும் மேற்பட்ட பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் பாலிதீன் பை பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.