அரசு மருத்துவமனையில் லிப்ட் செயல்படாததால் நோயாளிகள் கடும் அவதி
சிவகங்கை, நவ. 25: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் செயல்படாததால் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்கத்தொடங்கியது. இங்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 500 படுக்கைகள் உள்ளன. வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு பரிசோதணைக்காக வருகின்றனர். விபத்தில் சிக்குவோர், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்யப்படுபவர் என ஏராளமானோர் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
விபத்தில் காயம்பட்டு இம்மருத்துவமனைக்கு அதிகமானோர் வருகின்றனர். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களிலும் மொத்தம் எட்டு லிப்டுகள் உள்ளன. மூன்று தளங்களுக்கு செல்லும் வகையில் இந்த லிப்டுகள் செயல்பட்டு வந்தன. ரத்தம், எம்ஆர்ஐ, சிடி, எக்ஸ்ரே என அனைத்து பரிசோதனைகளும் தரைத்தளத்திலேயே உள்ளன. இதனால் மேல் தளங்களில் சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் கீழ் தளத்திற்கு தான் பரிசோதனைகளுக்கு வர வேண்டும். இதற்காக லிப்ட் மூலம் வருவது எளிதாக இருக்கும். இல்லையெனில் நீண்ட தூரம் நடந்தோ அல்லது சக்கர நாற்காலி மூலமோ சுற்றி வர வேண்டும். இந்நிலையில் லிப்ட்கள் ஆண்டுக்கணக்கில் செயல்படாமல் உள்ளன. இதனால் சிகிச்சை பெறுபவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள், சிகிச்சை பெற வருபவர்களை மேல் தளங்களுக்கு மற்றவர்கள் தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.
எனவே லிப்ட்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சிகிச்சை பெற வந்தவர்கள் கூறியதாவது: லிப்ட் செயல்படாததால் பரிசோதனைகள் செய்ய நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட உடல்நிலையில் நீண்டதூரம் நடக்க முடியவில்லை. ஆண்டுக்கணக்கில் லிப்டை செயல்படாமல் வைத்துள்ளனர். உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.