போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
திருவாடானை, ஜூலை 29: திருவாடானை வடக்குத்தெரு வழியாக தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்களது டூவீலர்கள் மற்றும் கார்களை போக்குவரத்து விதியை மீறி சாலையின் அருகிலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்வதால் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் செயல்படும் தேசிய வங்கிக்கு தினசரி வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை அவசர கதியில் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதால் அவ்வழியாக சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களிலும், கோவில் திருவிழா நாட்களிலும் அப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
அந்த நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடும். ஆகையால் இந்த வடக்குத் தெருவில் தொண்டி - மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து விதியை மீறாமல் கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்தும் வகையில் காவல்துறையினர் அறிவுறுத்த வேண்டுமெனவும் அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: இந்த பிரதான சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்களிலும், கோவில் திருவிழா காலங்களிலும் இப்பகுதியில் வாகனங்கள் அதிகளவில் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மேலும் இப்பகுதியில் உள்ள தேசிய வங்கி முன்பும், கடைகளின் முன்பும் போக்குவரத்து விதியை மீறி பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் வடக்கு தெருவில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டுமெனவும், சாலையின் இருபுறங்களிலும் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு எற்படுத்தாமல் நிறுத்தும் வகையில் காவல்துறையினர் அறிவுறுத்த வேண்டுமெனவும் கூறினர்.