கழிப்பறை கட்டுவதை நிறுத்தக் கோரி வழக்கு: வட்டாட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
மதுரை, ஜூலை 29: பள்ளி சமையல் கூடம் அருகே கழிப்பறை கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் வட்டாட்சியர் ஆய்வு செய்து அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தொண்டியைச் சேர்ந்த சுலைமான், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தொண்டி பேரூராட்சி அலுவலகம் கடற்கரை சாலையில் உள்ளது. பேரூராட்சிக்கு செல்லக்கூடிய பொதுப் பாதை ஏற்கனவே பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லக் கூடிய சாலையில் தொண்டி அரசு பள்ளியின் சமையல் கூடத்திற்கு பக்கத்தில், பள்ளி குழந்தைகள் பயன்பாட்டிற்காக கழிப்பறை கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
உணவு சமையல் கூடத்திற்கு அருகிலேயே கழிப்பறை கட்டுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானம் கட்டுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும். எனவே, குழந்தைகளின் சுகாதார சீர்கேட்டை ஏற்படும் வகையில் கட்டப்படும் கழிப்பறை பணிகளை நிறுத்துமாறும், அப்பகுதியில் கழிப்பறை கட்டக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிபதி மரியா கிளெட் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தை தொண்டி வட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.