காசநோய் உள்ளவர்கள் பரிசோதனை செய்வது அவசியம்
சிவகங்கை, ஜூலை 28: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காசநோய்த் தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருக்கக்கூடாது. தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்து விதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2025க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் 52காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி மையங்கள் உள்ளன.
மேலும், 14 புதிய இருகண் நுண்ணோக்கிகள், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் உபயோகத்திற்கென தற்போது வழங்கப்பட்டுள்ளது. காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் நமது மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அவ்வாகனத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவியாக மாதம் ரூ.500 வீதம் சிகிச்சை பெறும் காலத்தில் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.