முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக எண்ணற்ற திட்டத்தை செயல்படுத்துகிறார்: மேயர் முத்துத்துரை பேச்சு
காரைக்குடி, ஜூலை 25: காரைக்குடியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளிடம் கோரிக்கை மனு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் ராஜா தலைமை வகித்தார். முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய, நடுத்தர, சாதாரண மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
முதல்வரின் சீரிய சிந்தனையில் உருவான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளும் மக்களை தேடி வந்துள்ளது. உங்களின் தேவைகள் அனைத்தும் இம்முகாமில் தீர்க்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். முதல்வரின் அனைத்து அறிவிப்புகளும் மக்களை நேரடியாக சென்று சேர்கிறது.
காரைக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் நமது மாநகராட்சிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஒரு சில மனுக்களுக்கு உடனடிய தீர்வுகாணப்பட்டு வருகிறது. மற்ற மனுக்களை 45 நாட்களுக்குள் உரிய தீர்வுகாண வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு முகாம்களிலும் மக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்கள் அளித்து வருகின்றனர். மக்களிடம் பெரும் வரவேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது. மக்களின் நலனுக்காக இரவு, பகல் பாராது சிந்தித்து இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகி பிஎல்.ராமச்சந்திரன், திமுக அவைத்ததலைவர் சன்சுப்பையா, மாநகர இளைஞரணி தினகரன், வட்டசெயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.