வேலைவாய்ப்பு முகாமில் 412 பேருக்கு பணி ஆணை வழங்கல்
சிவகங்கை, ஜூலை 28: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார்.
மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கென சுமார் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மாணவ,மாணவிகளிடையே கற்றலுக்கான ஆர்வத்தை தூண்டுகின்ற வகையிலும், பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து, அவைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றார்போல் தனியார் துறையிலும் சிறந்த வேலை வாய்ப்பினை பெற்றிடும் வகையில், தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இன்று நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 92 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 2,095 வேலைநாடுநர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து, நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 12 மாற்றுத்திறனாளிகள் உட்பட 412 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் 91 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம்களை விரைவில், நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், சுபாஷினி கலந்து கொண்டனர்.