ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பணிகள் தீவிரம்: உரம் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
ராமநாதபுரம்/சிவகங்கை, நவ.28: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நெல் 80ஆயிரம் ஹெக்டேரிலும், கரும்பு சுமார் 4ஆயிரம் ஹெக்டேரிலும், வாழை 3ஆயிரம் ஹெக்டேரிலும், நிலக்கடலை 3ஆயிரத்து 500 ஹெக்டேரிலும், காய்கறிகள், சிறு தானியம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் எஞ்சிய நிலத்திலும் பயிர் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் 90 சதவீத விவசாய நிலங்கள் கண்மாய் பாசனத்தை நம்பியே உள்ளன. 80ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் செய்யப்பட்டு வந்த நெல் விவசாயம் என்பது குறைந்து கடந்த ஆண்டு 65ஆயிரம் எக்டேர் நிலத்தில் மட்டுமே செய்யப்பட்டது. சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு வரை காரி, ராபி(கோடை விவசாயம்) பருவம் எனப்படும் இரு போக சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ராபி பருவ விவசாயம் என்பது முழுமையாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றிய நிலையில் தென் மேற்கு பருவமழை சில பகுதிகளில் கன மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மீண்டும் தற்போது புயலால் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது.
இதையடுத்து விவசாயிகள் விவசாயப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 70ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் விதைப்பு பணி நடைபெற்ற நிலையில், தற்போது நாற்று பறித்து நடும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையை நம்பி ஆடிப்பட்ட விதைப்பு செய்தவர்கள் அதன் பிறகு மழை இல்லாமல் பாதிக்கப்பட்டனர். வடகிழக்கு பருவ மழை தொடர்நது பெய்து வருவதால் விவசாயப் பணிகளை நம்பிக்கையோடு தீவிரப்படுத்தியுள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து நம்பிக்கை தரும் வகையில் தொடர் மழை இருந்ததால் விவசாயப் பணிகளை செய்து வருகிறோம். தற்போது நாற்று நடும் பணி, களை எடுத்தல், உரம் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கன மழை பெய்தால் இந்த ஆண்டு போதிய விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
இதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சுமார் 4 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது, இதில் கடலாடி,முதுகுளத்தூர், கமுதி, சிக்கல் பகுதியில் அக்டோபர் மாதத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு நெல் விதைக்கப்பட்டது, பயிர்கள் முளைத்து 15 நாட்கள் ஆன நிலையில் தொடர் மழையின்றி பயிர்கள் கருகியது. சில இடங்களில் வளர்ந்த நிலையில் இருந்தது. இதுபோன்று திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் செப்டம்பர் மாதத்தில் உழவார பணிகளை செய்து நெல் விதைக்கப்பட்டது. பயிர்கள் நன்றாக விளைந்த நிலையில், அக்டோபர் மாத கடைசியில் பெய்த கனமழைக்கு சுமார் 10ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மாவட்டத்தின் பரவலான இடங்களில் பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடர்மழையால் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் மழையை பொருட்படுத்தாமல் களை எடுத்தல், உரமிடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். தண்ணீரின்றி பயிர்கள் கருகிய பகுதிகள், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மீண்டும் இரண்டாவது முறையாக உழவார பணிகளை செய்து,நெல் நாற்றை விருதுநகர்,சிவகங்கை,மதுரை மாவட்டங்களில் விலைக்கு வாங்கி வந்து நாற்று நடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு விவசாய பணிக்காக மாவட்டம் முழுவதும் 6,277 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை நடந்து வருகிறது. தொடர் மழையால் விவசாயிகள் உரமிட்டு வருவதால், கூடுதலாக தேவைப்படலாம் என கருதி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து 1,073 டன் உரங்கள் வரவழைக்கப்பட்டு தற்போது கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கும் பணி நடந்து வருகிறது.உரம் தேவையை பயன்படுத்தி தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.