நவ.4, 5ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
சிவகங்கை, அக்.25: மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைறெ உள்ளன.இது குறித்து கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நவ.4ம் தேதி அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நவ.5ம் தேதி அன்றும் பேச்சுப்போட்டிகள் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர், அரசு
மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்குபெற்று, வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இருவர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுத்தொகையாக தலா ரூ.2,000 வழங்கப்படும். பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் பங்கேற்புப் படிவத்தில் ஒப்பம் பெற்று, போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575-241487என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.