ஜெர்மன் மொழி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பம்
சிவகங்கை, ஆக. 12: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெறுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராகவும், பி.எஸ்.சி நர்சிங், பொது நர்சிங் மற்றும் ஜிஎன்எம் டிப்ளமோ ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
21 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் என்ற விதிமுறைகளுக்குட்பட்டு இருத்தல் வேண்டும். மேலும், இப்பயிற்சிக்கான ஒன்பது மாத கால அளவு, விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோ சார்பில் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து, அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை வருவாய் ஈட்டிடும் வகையில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.