செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோய் தொற்று பரவும் அபாயம்
செங்கல்பட்டு, ஜூலை 9: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிருந்து மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலதரப்பட்ட நோய்கள் சிகிச்சை பெறுவதற்கு இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
அதுபோல, செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பிரசவம் மற்றும் விபத்தில் சிக்கியவர்கள், வெட்டு குத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது, நோயாளிகளுக்கு உதவிக்காக மற்றும் அவர்களை பார்ப்பதற்காக என பலர் இந்த மருத்துவமனைக்கு வருவது உண்டு. இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் என்று அழைக்கப்படும் புதிய கட்டிடத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. அந்த கழிவுநீர் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு செல்லும் வழியில் ஆறாக ஓடுவதால் நோயாளிகள், பார்வையாளர்கள், உறவினர்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள் கழுவுநீரை தாண்டி செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், நோயாளிகளுக்கு உதவிக்கு வந்தவர்கள் மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள் ஆறாய் ஓடும் கழிவுநீரை ஒட்டித்தான் தங்க வேண்டிய அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு இங்கு ஆறாய் ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் முன்னர் மருத்துவமனை நிர்வாகம் விரைந்து செயல்பட்டு கழிவுநீரை வெளியேறுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.