கேரள கோயில்களுக்கு நெற்கதிர்கள் அனுப்பி வைப்பு
ராஜபாளையம், ஜூலை 28: கேரள மாநில கோயில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் களைகட்டும். குறிப்பாக, சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில், கிருஷ்ணன் கோயில், கொட்டாரக்கரா விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் நடைபெறும் நிறை புத்திரி விழா மிகவும் பிரசித்திபெற்றது.
இந்த விழாக்களில் நன்கு விளைந்த நெற்கதிர்களை வைத்து வழிபாடு செய்வது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கமாகும். இதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் இருந்து நன்கு விளைந்த நெற்கதிர் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி இந்த ஆண்டும் நெற்கதிர்கள் வாகனங்களில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக, புதுப்பாளையம் கருங்குளம் நீர்ப்பாசன பகுதியில் இருந்து 108 நெற்கதிர் கட்டுகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், கேரள கோயில்களுக்கு இரண்டு கார்கள் மற்றும் ஒரு வேனில் நெற்கதிர் கட்டுகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. கேரள கோயில் விழாக்களுக்கு கடந்த 11 ஆண்டுகாக நெற்கதிர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த குளோப் நாகராஜன் தெரிவித்தார்.